Thursday, 20 September 2012

காதலித்த பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்தது ஒரு பெண்ணா?

பெண்ணை கடத்திச் சென்று, திருமணம் செய்ததாக கூறப்பட்ட புகாரை, நீதிபதி விசாரணை செய்தபோது, "மணமகன் ஒரு பெண்!´ என பெண்ணின் மாமா, புதிதாக குற்றம் சாட்டியதை கண்டு, பாகிஸ்தான் கோர்ட் அதிர்ச்சி அடைந்தது. பாகிஸ்தானில், லாகூரில் இருந்து நூறு கி.மீ., தொலைவில் உள்ளது குஜ்ராத் மாவட்டம். இப்பகுதியை சேர்ந்த, ஆயிஷா, சாசத் பட் இருவரும், வீட்டுக்கு தெரியாமல் காதலித்து, ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டனர். தனது மகளை கடத்திச் சென்று, சாசத் பட் திருமணம் செய்ததாக, ஆயிஷாவின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பான வழக்கு, லாகூர் கோர்ட்டில் நேற்று, விசாரணைக்கு வந்தது. ஆயிஷா கூறுகையில், "தன்னை சாசத் கடத்திச் செல்லவில்லை;இருவரும் காதலித்து, சுய விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர் பொய் புகார் தந்துள்ளனர், கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்´என, கூறினார். ஆயிஷாவின் வாக்குமூலத்தை நீதிபதி பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில், அவரது தாயின் தம்பி ஆரிப், அதிரடியாக புதிய புகார் ஒன்றை நீதிமன்றத்தில் முன்வைத்தார். "ஆயிஷாவை கடத்திச் சென்ற சாசத் பட், உண்மையில் ஆணே அல்ல; அவர், சோனியா பட் என்ற பெயரை கொண்ட பெண். ஆண் போல நடித்து, பெண்களை கடத்திச் சென்று விபச்சாரத்தில் தள்ளி விடும் கும்பலை சேர்ந்தவர்; அவர் ஆணா என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை நடத்த,உத்தரவிட வேண்டும்´ என, ஆரிப் தெரிவித்தார். புகாரை கேட்டதும், நீதிபதி உட்பட கோர்ட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். சில நிமிடம் கழித்து, சகஜ நிலைக்கு திரும்பிய நீதிபதி, ஆயிஷாவின் பெற்றோர் புகாரை தள்ளுபடி செய்தார். ஆரிப் கோரிக்கையை, குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிடுமாறு கூறினார். மேலும், ஆயிஷா, சாசத் பட் இருவருக்கும், தக்க பாதுகாப்பு வழங்கி, அவர்களின் இருப்பிடத்தில் சேர்க்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment